புனித முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பெரும் பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் “மிலாத்-உன்-நபி” திருநாளுக்காக வாழ்த்துச் செய்தியைப் பகிர்வதில் நான் பெருமகிழ்ச்சடைகிறேன்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகம் முழுவதற்கும் அமைதி, சமத்துவம், கருணை மற்றும் பரஸ்பர மரியாதையின் மேன்மையான செய்தியையே போதித்தார். தற்போதைய உலகளாவிய சமூகம் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொண்டுள்ள, குறிப்பாக கடுமையான யுத்த மோதல்கள் காரணமாக அப்பாவி உயிர்கள் பலியாகும் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகும் பின்னணியில், அவரது அந்தத் தொலைநோக்குப் பார்வை எப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்பது எனது உணர்வாகும்.
குறிப்பாக, நபி அவர்களின் வாழ்க்கையிலிருந்து தற்போதைய சமூகத்திற்கும் நமது நாட்டிற்கும் பெறக்கூடிய மிகச் சிறப்புமிக்க முன்மாதிரி என்னவெனில், நீதி, மத சகிப்புத்தன்மை மற்றும் பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகும். பல்வேறு இனங்களும் மதத்தினரும் வாழும் நாடு என்ற வகையில், நாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கூட்டுப் பொறுப்புடன் எழுச்சி பெற அவரது முன்மாதிரிகளை நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த புனித வேளையில், உலகளாவிய போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு அமைதி நிலவும் உலகம் உருவாக வேண்டும் என்று நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன். மேலும், உலகம் முழுவதும் போரின் கொடூரத்தினாலும் துயரங்களினாலும் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து வேதனையில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரது ஒரே பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.
இம்முறை கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, நீர்கொழும்பு பெரியமுல்லை அல் ஹிப்பால் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறும் தேசிய விழா, நமது நாட்டில் பன்முகத்தன்மையின் அழகைப் போற்றி, மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
இந்த தேசிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் முஸ்லிம் சமய விவகார மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட அமைப்புக் குழுவினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதாபிமானம் கொண்ட இலங்கையர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் அமைதி, செழிப்பு, சகோதரத்துவம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய மிலாத்-உன்-நபி திருநாள் வாழ்த்துகள்!
கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு.










