தேசிய மிலாத்-உன்-நபி: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

President Anura Kumara Dissanayake 2024.11.18 (1)

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் உதிக்கும் போது, ​​உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய பக்தர்கள் தியாகத்தை முன்னிறுத்தி பெரும் பக்தியோடு கொண்டாடும் புனித முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழா அல்லது மிலாத்-உன்-நபி கொண்டாட்டம் இன்றாகும் (26). சமத்துவ சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இது, வெறும் விழாவிற்கும் மேலாக ஆழமான ஆன்மீக மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும்.

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, எல்லையற்ற பொறுமையையும் கருணையையும் கொண்ட பாதையை வெளிப்படுத்திய முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு தோன்றிய மிகச்சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராவார். 23 ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட பலவிதமான இன்னல்களும், செய்த ஈடு இணையற்ற தியாகங்களும் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலவும் நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.

இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதனை மதிப்பிடுவதை நிராகரித்த அவர், மனிதகுலம் முழுவதும் ஒரே மூலத்திலிருந்து உருவானது என்பதையும், உண்மையான மேன்மை என்பது உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உன்னதமான விழுமியங்களால் மட்டுமே அளவிடப்பட முடியும் என்பதையும் உணர்த்தினார். சமூகத்தில் பணக்காரர்-ஏழை இடைவெளியை நீக்கி, ஒடுக்கப்பட்டோரின் உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, அவர் சமூக நீதியினதும் சமத்துவத்தினதும் அடித்தளத்தைக் கட்டியெழுப்பினார். சட்டத்தின் ஆட்சி நிலவும், நீதியான மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டையும் நல்லிணக்க சமூகத்தையும் உருவாக்கும் நமது எதிர்பார்ப்பை உண்மையாக்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல் நபிகளாரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து ஏராளமாக வழங்கப்படுகிறது.

மனிதனின் உள்மனத் தூய்மையையும் சமூகத்தின் ஒழுக்கநெறிகளையும் மாசுபடுத்தும் அனைத்து விடயங்களையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. எனவே, நமது தாய்நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் போதைப்பொருள் ஆபத்திற்கு எதிராக அரசாங்கத்தால் தொடக்கப்பட்ட தேசிய நடவடிக்கை போன்ற சமூக ஒழுக்கத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் பெரும் பலத்தை அளிக்கின்றன.

முறிந்த மனங்களைக் குணப்படுத்தி, வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பிளவுக்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் ஒரு புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபிகளாரால் சுட்டிக்காட்டப்பட்ட ஈடு இணையற்ற தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி அந்தப் பாதையை ஒளிரச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புனித முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் நன்முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி உங்கள் வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய பக்தர்களுக்கும் அர்த்தமுள்ள மிலாத்-உன்-நபி திருநாள் வாழ்த்துகள்!

அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி,

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு

2026 ஆகஸ்ட் 26

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்