காவன்திஸ்ஸ யானையின் மரணத்தைத் தொடர்ந்து, காட்டு யானைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்லும் சம்பவங்களின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பு ஏதேனும் செயற்படுகிறதா என்பதைக் கண்டறியுமாறு பொலிஸாரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் சுற்றாடல் அமைச்சு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
‘டயானா’ உள்ளிட்ட யானைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் தொடர்பாகச் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் உறுப்பினரா என்பதையும், வெவ்வேறு யானைகள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு இடையில் தொடர்புகள் உள்ளனவா என்பதையும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
காட்டு யானைகள் கொல்லப்படும் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய முறையான மற்றும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து, இச்சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியம் என சுற்றாடல் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.