அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயைத் தலையில் சுட்ட தலிபான் தீவிரவாதி, அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் தன் ட்விட்டர் பக்கத்தில், ”மலாலா. உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் இரண்டாவது முறை உங்கள் வாழ்க்கையை எடுக்கும்போது அதில் எந்தத் தவறும் இருக்காது” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ட்விட்டர் அப்பக்கத்தை முடக்கியது.
இதனைத் தொடர்ந்து மலாலா அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “இவர் தலிபான்களின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் . நான் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணமானவர். இவர் எவ்வாறு சமூக வலைதளத்தில் மக்களை மிரட்ட முடியும். அவர் எவ்வாறு சிறையிலிருந்து தப்பித்தார்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பினார்.


