ஜனாஸா விவகாரத்தை இழுத்தடித்து இழுத்தடித்து இறுதியில் ஜனாஸாக்களை எரித்தது சாம்பலாக்கும் நடவடிக்கைகளையே ராஜபக்சாக்களின் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நேற்று (03) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
“ஜனாஸா நல்லடக்கம் சம்பந்தமான பிரச்சினை முஸ்லிம் மக்களுடைய மனதை ஆழமாக புண்படுத்திய பிரச்சினைகளில் ஒன்றாகும். அந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
இதனால் முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் மக்கள் போராடினார்கள். அவர்களது மதச் சடங்குமுறைப்படி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி கேட்டனர். ஆனால் அரசாங்கம் செவிமடுக்கவில்லை.
ஆனால், முஸ்லிம் தலைவர்கள் தங்களது தன்மானத்தை அடகு வைத்து இவ்வாறு செயற்படுகின்ற இந்த அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக கையுயர்த்தினர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் தலைகாட்டிய கோட்டாபய முஸ்லிம் பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தார். அதுமட்டுமல்ல, அன்று ரிஷாட் பதியூதின், ஹிஸ்புல்லா, மருத்துவர் ஷாபி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தியல்களை நிலைநாட்டடியவர்கள் ராஜபக்சாக்கள்.
அதனால், அதிலிருந்து இன்றுவரை அவர்களால் மீளமுடியவில்லை. அதனால்தான் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், முஸ்லிம்களுக்கு எதிரான நாடாகிய இஸ்ரவேலில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும், இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
தற்போது ஜெனிவாவில் இலங்கை விவகாரத்தில் ஜனாஸா பிரச்சனை பிரதானமாக இருப்பதால், இம்ரான் கான் இலங்கை வந்தபோது இடம்பெற்ற கலந்துரையாடலினால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் முடிவுக்கு இலங்கை அரசாங்கம் வந்தது.
பின் எங்கு நல்லடக்கம் செய்வதென்ற முடிவுக்கு வந்த அரசாங்கம் தமிழ் பிரதேசங்களுக்குள் கொண்டு திணிப்பதற்கு முயற்சிக்கிறது.
இவ்வாறு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபொழுது அதனை எதிர்த்து பிரதேச மக்கள் போராடுவது தவிர்க்க முடியாது.
இதனை காரணம் காட்டி ஜனாஸா விவகாரத்தை இழுத்தடித்து இழுத்தடித்து இறுதியில் ஜனாஸாக்களை எரித்து சாம்பலாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.”