மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் பாதுகாக்கப்பட்டு வந்த ரோசா குவார்ட்ஸ் (Rosa Quartz) வளம் உள்ளிட்ட தேசிய நாமல் உய்னவின் 36வது ஆண்டு விழா, பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தெற்காசியாவின் மிகப்பெரிய ரோசா குவார்ட்ஸ் மலைத் தொடரும், மிகப்பெரிய நா (Na) மரக் காடும் அமைந்துள்ள தேசிய நாமல் உய்னவின் 36வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்து உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகையில்:
“நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டதும், தனித்துவமான பல்லுயிர் பெருக்கம், சுற்றுலா மற்றும் பாரிய கல்விசார் மதிப்பைக் கொண்டதுமான நமது தேசிய நாமல் உய்னவை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக தமது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல நாயக்க தேரருக்கும், உங்களின் இந்த உன்னத முயற்சிக்கு பலமாக நின்ற அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் முதற்கண் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் உண்மையான முதலீடு என்பது கட்டப்படும் கட்டிடங்களுக்குள்ளே இருப்பதில்லை. நாட்டின் உண்மையான முதலீடு என்பது எமது இளம் தலைமுறையினரின் கல்வி மற்றும் அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்குள்ளேயே உள்ளது.
தேர்வுமுறைக்கு மாத்திரம் சுருங்கிவிடாமல், இயற்கையை நேசிக்கும், பரிபூரண ஆளுமைத் திறன்கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காகவே நாம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை ஆரம்பித்துள்ளோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் நாம் வெறும் வார்த்தைகளில் மாத்திரம் நின்றுவிடவில்லை. நடைமுறைச் சாத்தியமான பல கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளோம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆபத்தான கழிவுகளைச் சுற்றுச்சூழலில் கலந்து இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிராக 20 மில்லியன் ரூபா வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்கும் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அத்துடன், பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலங்களை அழிப்பவர்களுக்கு எதிராக 1 மில்லியன் முதல் 10 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நாம் நடைமுறைப்படுத்திய நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் காரணமாக இன்று நாமல் உய்னவைச் சுற்றியுள்ள மக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதன்போது அனுசாசனை உரையாற்றிய தேசிய நாமல் உய்னவின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரர் குறிப்பிடுகையில்,
“இந்த நாமல் உய்னவை பாதுகாக்க நாம் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம்மனைவரின் பொறுப்பாகும். நான் அரசியல் பேச விரும்பவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரிகள் எமது தொலைபேசி அழைப்புகளுக்கு செவிமடுக்கிறார்கள், அமைச்சர்கள் எமக்கு செவிசாய்க்கிறார்கள் என்பது மிகப்பெரிய விடயமாகும். இன்று எமது பிரதமர் இங்கு வருகை தந்துள்ளதால் நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். ஒன்று கல்கிரியகம பிரதேச வைத்தியசாலையை அமைத்துத் தருவது, மற்றையது ஆடியகல பாடசாலையை மேம்படுத்தித் தருவதாகும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ச குறிப்பிடுகையில்:
“வனவாசி ராகுல தேரர் தேசிய நாமல் உய்னவின் ஸ்தாபகர் மாத்திரமன்றி அதன் பாதுகாவலர் என்று கூறுவதும் மிகவும் பொருத்தமானது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது அனைவரின் பொறுப்பாகும். அதேபோல், நீங்கள் கோரியமைக்கேற்ப கல்கிரியகம பிரதேச வைத்தியசாலையை மேம்படுத்தும் பணியை நாம் முன்னெடுப்போம். வைத்தியசாலையில் உள்ள வெற்றிடங்களை எதிர்வரும் ஆட்சேடிப்புகள் ஊடாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எமது அரசாங்கம் கல்விக்கு விசேட இடமளித்துள்ளது. அதற்கமைய 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் மேம்படுத்தப்படும் பாடசாலைகளில் ஆடியகல பாடசாலையும் உள்ளடங்கியுள்ளது. எனவே, அந்தப் பாடசாலையையும் எதிர்காலத்தில் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், அமைச்சர் வசந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் திலீப தாரூக்க, பிரதேச சபை தவிசாளர் ஜி.கே. பந்தார உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், ஜனாதிபதி பணிப்பாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, கொரிய பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.