1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் போராட்டத்தின் 50ஆவது நினைவு தினம் இன்று (05) அனுஷ்டிக்கப்படுகின்றது.
“என்றென்றும் நினைவு கூருவோம் தோழர்களே… என்ற வாசகத்தை முன்னிறுத்தி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம் மக்கள் விடுதலை முன்னணியினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின் போது உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக பல நிகழ்வுகளை இவ்வருடத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது
இதற்கமைய இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த மாவட்டங்களில், மக்கள் விடுதலை முன்னணியினை சார்ந்தவர்களின் ஆதரவின் கீழ் நினைவுச் சடங்குகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஹிங்குரகொட பகுதியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த போராட்டம் சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலத்தில் இடம்பெற்றபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட்டது.
மேலும் கிளர்ச்சியை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் ஆகியோருக்கு எதிராக நிறுவப்பட்ட குற்றவியல் நீதி ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், பிரிட்டிஷ் மகாராணிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி போர் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்குக் காரணம் அப்போது மகா தேசாதிபதியாக இருந்தவர் மகாராணியினுடைய பிரதிநிதியாகவே காணப்பட்டமையே ஆகும்.
மேலும் குறித்த போராட்டம், இலங்கை வரலாற்றில் முக்கிய இடத்தினை வகித்துள்ளது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் விடுதலை முன்னணி, இந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றது.










