கொழும்பு உலகச் சந்தை மத்திய நிலையத்தில் 05 அமைச்சரவை அலுவலகங்களை நடத்துவதற்கு மாதம் 178 இலட்சம் ரூபா வாடகை செலுத்தப்படுவதாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வழங்கிய பதிலில் இருந்து உறுதியாகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சு, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகிய 05 அமைச்சரவை அலுவலகங்களுக்கான வாடகை பணமாகவே மேற்குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது.
இந்த அமைச்சரவைகளில் அதிக வாடகைப் பணமாக 7,22,664 ரூபா பிரசன்ன ரணவீரவின் பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் அலுவலகத்திற்கும், குறைந்த வாடகையாக 1,164,720 ரூபா தயாசிறி கமகேவின் பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் அலுவலகத்திற்கும் செலுத்தப்படுகிறது.
ஏனைய அமைச்சரவை அலுவலகங்களுக்கு,
பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத்துறை அமைச்சு – 1,930,808 ரூபா
தேனுக்கு விதான – கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு – 3,851,631 ரூபா
டி.வி.சாணக்க – விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு – 3,049,862 ரூபா
வாடகை பணம் செலுத்தப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சுக்களை நியமித்தபோது வீண்செலவுகளை குறைப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது மேற்குறிப்பிட்ட 05 அமைச்சரவைகளுக்கு மாத்திரம் மாதமொன்றுக்கு 17,819,685 ரூபாய் செலவாகிறது.










