“இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற எண்ணெய் முழுவதும் பகிரங்கமாக அழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாத்திரமே மக்களுக்கு அச்சமின்றி சிங்கள – தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியும்.” என்று அகில இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாள்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்வதானது ஏதேனுமொரு நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக அமையும் என்று சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யும் 4 பிரதான நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் தரமற்றது என்று இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (எஸ்.எல்.எஸ்.ஐ.) பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மாதிரிகள் இரண்டாவது முறையாகவும் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அது தரமற்றது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










