உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் இரயிலில் பயணம் செய்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பிரளயமாக மாறியுள்ளது.
மார்ச் 19ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பெண்கள், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அதே ரயிலின் மற்றொரு பெட்டியில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏபிவிபி) சில தொண்டர்கள் ஜான்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மத மாற்ற சந்தேகத்தின் பேரில் ரயில்வே ஹெல்ப்லைனில் அந்த ஆர்வலர்கள் புகார் செய்தனர். மேலும் ஜான்சியில் உள்ள தங்கள் அமைப்பிற்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆர்.பி.எஃப் (ரயில்வே பாதுகாப்புப் படை) காவலர்களுக்கு இது பற்றிய தகவல் கிடைத்ததும், ஜி.ஆர்.பி பிரிவைச் சேர்ந்த காவலர்கள், ஜான்சி ரயில் நிலையத்தை அடைந்து சம்பந்தப்பட்ட நால்வரையும் ரயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர். மத மாற்றம் செய்ய முற்பட்டதாக சுமத்தப்பட்ட புகார் தவறானது என விசாரணயில் தெரிய வந்ததால் அவர்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை எதிர்த்து கேரள முதலமைச்சர், உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“உத்தர பிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மோசமாக நடத்தப்பட்ட விதம், சிறுபான்மையினரை நசுக்கும் பொருட்டு, ஒரு மதத்தை மற்றொரு மதத்துடன் சண்டையிட வைக்கும் சங் பரிவாரின் விஷம பிரசாரத்தின் விளைவு,” என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார்.










