ஷிரான் பாசிக்கு எதிரான வழக்கின் மேலதிக பூர்வாங்க விசாரணை மாநாடு நவம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Shiran Basik 2026.08.27 (1)

கொகெய்ன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக பூர்வாங்க விசாரணை மாநாட்டை நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு இன்று (02) அவர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை அரச சட்டத்தரணி, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துள்ளார். பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க, சமந்த அதுகோரள மற்றும் வசந்த பிட்டிகல ஆகிய சட்டத்தரணிகள், அந்த ஆவணங்களை ஆய்வு செய்து ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை அடுத்த தவணையின் போது நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாகத் தெரிவித்தனர்.

இவ்வழக்குடன் தொடர்புடைய சான்றுகளாகப் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தொகுதி தற்போது அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

குறித்த சான்றுகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரத் தேவையான போதிலும், தற்போது மேல் நீதிமன்றத்தின் சான்றுகள் அறை இடிந்து விழுந்துள்ளமையினால், அது தொடர்பில் இந்த சந்தர்ப்பத்தில் உத்தரவு எதையும் பிறப்பிக்கப்போவதில்லை என்றும் நீதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணை மாநாட்டை நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்