இனவாத முயற்சிகள் தோல்வி… மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

Sunil Hadunnetti 2026.10.02 (1)

நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற ரீதியில், அண்மையில் அவரது தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்தப் பின்னணியில் செயற்படும் இனவாத சூழ்ச்சிகள் மற்றும் முயற்சிகளை முழுமையாகத் தோற்கடித்து, அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து விரைவான மற்றும் நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து இதன்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டது. பாரம்பரியமாக பயிர்ச் செய்கை காலத்தில் பண்ணையாளர்களின் கால்நடைகள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அம்பாறை மாவட்டத்திலிருந்து வருபவர்கள் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதால் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினைக்கு பின்னால் சிலர் இனவாத அடிப்படையில் மோதல்களை ஏற்படுத்த முனைவதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எக்காரணம் கொண்டும் அத்தகைய இனவாத மோதல்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கம் ஜனாதிபதி மட்டத்தில் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகவும், குறித்த பகுதியை குறிப்பிட்ட மேய்ச்சல் நிலப் பகுதியாக பெயரிட்டு மகாவலி அதிகார சபை மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் உடன்பாட்டுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய பண்ணையாளர்களுக்கு குறித்த மேய்ச்சல் நிலங்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், ஏனைய தரப்பினருக்கு மகாவலி வலயத்திலிருந்து மாற்று நிலங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி இடம்பெறும் மணல், மண் மற்றும் அகழ்வுப் பணிகளால் சூழலுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதன்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டது. பொலிஸார் மற்றும் புவியியல் மதிப்பீட்டு மற்றும் சுரங்கப் பணியகத்தின் ஒத்துழைப்புடன் முறையான பொறிமுறையின் கீழ் இவ்வாறான சட்டவிரோத அகழ்வுகளைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் அனுமதிப்பத்திரமற்ற சட்டவிரோத அகழ்வுப் பணிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்தினார்.

மாவட்டத்தின் வனப் பாதுகாப்பு அதிகாரிகளால் எதிர்கொள்ளப்படும் போக்குவரத்து மற்றும் வளப் பற்றாக்குறை குறித்தும் இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்திற்கு விநியோகிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையே கிடைத்துள்ளமை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டிய அவர், அமைச்சு மட்டத்திலும் உரிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி அந்த குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்