நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ய கலேகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று (03) இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது. அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர், தீனியாவல பகுதியில் அமைந்துள்ள ஆரணிய சேனாசனத்தில் (ஆச்சிரமத்தில்) ஒளிந்திருந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நேற்று இரவே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு (CCD) அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவரை இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.










