ஜெட் A-1 விமான எரிபொருள் குழாய்க்காய்வு மற்றும் முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கி தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

CEYPETCO 2026.10.02 (1)

சக்திச் சந்தையில் வலுவான அரசாங்கப் பங்களிப்பைப் பேணி மக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தற்போது இலங்கையில் வலுவான மற்றும் மக்களுக்குப் பாரமில்லாத சக்திச் சந்தையொன்று கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஜெட் A-1 குழாய் முறைமை மற்றும் இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை கனிமநெய் சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) என்பவற்றுக்குச் சொந்தமான இரு புதிய எண்ணெய் தாங்கி சேமிப்பு முறைமைகளின் நிர்மாணப் பணிகளை இன்று (02) முற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சக்தித் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் தேசிய இலக்கிற்கு அமைவாக, விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்கால விமான எரிபொருள் தேவைக்கான கொள்ளளவை வழங்குதல் என்பவற்றுக்காக இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

நாட்டின் விமானச் சேவைத் துறையின் எதிர்காலத் தேவையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, முத்துராஜவெல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இணைத்து, விமான எரிபொருள் விநியோகத்திற்காகவே ஒதுக்கப்பட்ட சிறப்பு குழாய்க்காய்வு மற்றும் அதனுடன் இணைந்த தாங்கித் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது. 92,000 கனமீற்றர் மொத்தக் கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் இரு பெரிய ஜெட் ஏ-1 தாங்கிகளும் (தலா 30,000 கனமீற்றர்), இரு நடுத்தர அளவிலான தாங்கிகளும் (தலா 15,000 கனமீற்றர்) மற்றும் 2,000 கனமீற்றர் கொண்ட கூடுதல் தாங்கியொன்றும் அடங்கும். முத்துராஜவெல தாங்கித் தொகுதியிலிருந்து 21 கிலோமீற்றர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட நிலத்தடி குழாய்க்காய்வு மூலம் விமான நிலையத்திற்கு எரிபொருள் விநியோகக் குழாய் முறைமை இணைக்கப்படும். இத்திட்டம் 30 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கனிமநெய் தொழிற்துறையின் சேமிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை கனிமநெய் சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய சேமிப்புத் தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளது. இது நிறைவடைந்ததும், 15,000 கனமீற்றர் கொண்ட 02 தாங்கிகள் மற்றும் 10,000 கனமீற்றர் கொண்ட ஒரு தாங்கி என மூன்று தாங்கிகளைக் கொண்ட முறைமை மூலம் 40,000 கனமீற்றர் மேலதிக மொத்த சேமிப்புக் கொள்ளளவு வழங்கப்படும். இதன் மூலம் முனையத்தின் கனிமநெய் சேமிப்புத் திறன்கள் மேலும் மேம்படும் என்பதுடன், நாட்டின் கனிமநெய் உட்கட்டமைப்பைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்வதற்கு ஆதரவு கிடைக்கும். இத்திட்டம் 18 மாத ஒப்பந்தக் காலத்தைக் கொண்டதுடன், 2028 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதிசெய்து, உரிய சர்வதேச தரநிலைகள் மற்றும் தொழிற்துறையில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு அமைய இத்தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த மேலதிக சேமிப்புக் கொள்ளளவு மூலம் நாட்டின் எரிபொருள் கையிருப்பை வலுப்படுத்துதல், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எரிபொருள் தயாரிப்புகளை நம்பகத்தன்மையுடனும் தடையின்றியும் விநியோகிக்க ஆதரவு அளிக்கப்படும்.

இங்கு கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க,

“நாம் இன்று ஒரு சக்தி மாற்றக் காலகட்டத்தில் இருக்கிறோம். உலகம் வேகமாக சுத்தமான சக்திப் பயன்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு மின்சார வாகனப் பயன்பாடு மிகவும் முக்கியமானது. நமது நாடும் இப்போது அதை நோக்கி நகர்ந்து வருகிறது. சூரிய சக்திப் பயன்பாடும் இதற்கு முக்கியமானது. 2029 ஆம் ஆண்டில் 1200 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவை சூரிய சக்தி மூலம் தேசிய முறைமையில் சேர்க்க எதிர்பார்க்கிறோம். ஒரு நாடாக நாம் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவது போன்று எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதில் மக்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது. குறிப்பாக சக்தி நுகர்வு முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம். அதிக சக்தித் தேவை உள்ள சந்தர்ப்பங்களைத் தவிர்த்து மின்சாரப் பயன்பாட்டிற்கு மாறுவது, எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனங்கள், குறிப்பாக மின்சார வாகனப் பயன்பாட்டை நோக்கி நகர்வதன் மூலம் இந்த சக்திப் பாதுகாப்பிற்குப் பெரிய ஆதரவு கிடைக்கும்.”

இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா,

“மத்திய கிழக்கு போர் காரணமாக நாம் பெரும் சவாலை எதிர்கொண்டோம். ஆனால் ஜனாதிபதி தலையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கி நிலைமையை மிகச் சிறப்பாக நிர்வகித்தார். இதனால் உலகச் சந்தையில் டீசல் விலை 91 சதவீதத்தால் அதிகரித்த போது, நமது நாட்டில் 39.5 சதவீதத்தால் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல் விலை உலகச் சந்தையில் 80 சதவீதத்தால் அதிகரித்த போது, நமது நாட்டில் 41 சதவீதத்தால் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் கூட்டுத்தாபனம் இவ்வருடம் 28 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது. கடந்த வருடமும் 36 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டினோம். இவ்வளவு இலாபம் இருக்கும் போது எரிபொருள் விலையைக் குறைக்காதது ஏன் என்ற கேள்வி எழலாம்.

ஆனால், அந்த இலாபத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்துள்ளோம். எரிபொருள் சேமிப்புக் கொள்ளளவை அதிகரிப்பதற்காகக் கைவிடப்பட்டிருந்த ஆறு தாங்கிகளைச் சீரமைப்பது உட்பட 11 தாங்கிகளின் கொள்ளளவை இணைத்தல், தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நமது எண்ணெய் நிரப்பும் பிரிவை நவீனமயமாக்கி முத்துராஜவெலயில் புதிய தாங்கித் தொகுதியைக் கட்டுதல், துறைமுகத்திலிருந்து கொலன்னாவ வரை எரிபொருளை இறக்குமதி செய்ய இரு புதிய குழாய்களைப் பதித்தல், கட்டுநாயக்க வரை ஜெட் A-1 புதிய குழாய்க்காய்வைப் பதித்தல் உட்பட குழாய் முறைமையை முறைப்படுத்துதல் மற்றும் புதிய குழாய்க்காய்வுகளைப் பதித்தல் உள்ளிட்ட பல திட்டங்களை அந்த இலாபத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்துகிறோம். எனவே அதன் பலனை நாம் மீண்டும் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.”

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர் குமார ஜயகொடி, சக்தி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, வெளிநாட்டு தூதுவர்கள், சக்தி அமைச்சு மற்றும் இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சினோபெக் (Sinopec) நிறுவனத்தின் பிரதிநிதிகள் உட்படப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்