சிகிச்சைக்காக எனத் தெரிவித்து திடீரென சிங்கப்பூர் சென்ற ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (24) லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராவதாக அறிவித்திருந்த போதிலும், இதுவரை நாடு திரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தமது குடும்பத்தில் எவரும் பயந்து ஓடமாட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும், ஷிரந்தி ராஜபக்ஷ திடீரென சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அவர் மீண்டும் நாடு திரும்புவாரா என்ற கேள்வி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், 2022 மே 09 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு தப்பியோடி ஒளிந்திருந்த விதம் குறித்து நினைவூட்டும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. நாமல் ராஜபக்ஷவின் கூற்றின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தின் தப்பியோடிய வரலாற்றை மறைக்க முயற்சி செய்தபோதிலும், ஷிரந்தி ராஜபக்ஷ இதுவரை நாடு திரும்பாமையினால் ராஜபக்ஷர்களின் தப்பியோட்டம் குறித்த உரையாடல் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.
அதேபோல், பசில் ராஜபக்ஷ, ஷமீந்திர ராஜபக்ஷ, ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோரும் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










