டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்குச் சொந்தமான பல உள்நாட்டுச் சொத்துக்கள் தொடர்பில் கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள், வாகனங்கள் உட்பட பல சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இத்தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஷிரான் பாசிக் என்பவர் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து அந்த வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தவிர, சந்தேகநபருக்கு டுபாயில் 1.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஜீப் வண்டி ஒன்று உள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் அவருக்குச் சொந்தமான சொத்துக்களில் கொழும்பு மெரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள பல ஹோட்டல்கள் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையங்கள் உட்பட பல சொத்துக்கள் அடங்குவது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.










