குறுகிய காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரம், நெருக்கடிக்கு முன்னர் இருந்த நிலையை அடைந்து வருவதாகவும், அது ஒரு விதிவிலக்கான வெற்றி என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராஜதந்திர சந்திப்பில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் கடன் தரவரிசையை மேலும் உயர்த்துவதற்காக, மூன்று சர்வதேச கடன் தர நிர்ணய முகவர் நிலையங்களுடனும் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
ப பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு செலாவணி கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் அரசாங்கக் கடன்களை மறுசீரமைத்தல் ஆகியவற்றின் மூலம் முழுப் பொருளாதாரத்திலும் திடீர் கொந்தளிப்புகள், அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் அல்லது கட்டுப்படுத்த முடியாத அபாயங்கள் இன்றி, நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முறையாகவும் தடையின்றியும் முன்னெடுத்துச் செல்வதற்கான பொருளாதார ஸ்திரத்தன்மை (மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டங்களின் மூலம் வெளிநாட்டு கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்ததாகவும், அதற்கு மேலதிகமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நிதிச் சமநிலையை சீரமைக்கவும் முடிந்ததாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடுமையான செலுத்தல் சமநிலை நெருக்கடியை எதிர்கொண்டு மிக விரைவாக பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த ஒரு நாடாக இலங்கை சர்வதேசத்திற்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.










