‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹிந்த கஹந்தகம, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய சகா என்பதுடன், 2017 ஒக்டோபர் மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவில் பங்கேற்ற இலங்கைக் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
அவர், சுயதொழில் செய்வோரின் தலைவர் எனத் தன்னைக் கூறிக்கொண்டு புறக்கோட்டை வியாபாரிகளிடம் கப்பம் வசூலித்த காலத்தில், நாமல் ராஜபக்ஷவின் ‘நீல பலகாய’ அமைப்புடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார். அந்தத் தொடர்புகளின் காரணமாகவே உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு மஹிந்த கஹந்தகமவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மூலம், நாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகத் தலைவர்களுடன் அவர் மிக நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. அந்தப் பாதாள உலகத் தலைவர்கள் மஹிந்த கஹந்தகமவை ‘டாடா’ (Dada) என்றே அழைத்து வந்துள்ளனர்.


