இலங்கையின் அனைத்து மாகாணங்களையும், குறிப்பாக வட மாகாணத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடையின் கீழ் அனைத்து நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இப் புதிய பிரிவு, 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.
நிகழ்வில் மேலும் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா:
“திரு. அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின்கீழ் இலங்கை வளமான நாடாகவும், அழகான வாழ்க்கையை நோக்கியுமான ஒரு மாற்றத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் வட மாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி காட்டும் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம். அத்துடன், அந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த மன்னார் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஒப்பந்தம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலேயே கையெழுத்தானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி வழங்குவதை, எங்களது குடும்ப உறுப்பினரொருவருக்கான கடமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறோம். நாட்டின் அனைத்து மக்களினதும் நலன் மற்றும் நிலையான முன்னேற்றத்திற்காக இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்” எனக் குறிப்பிட்டார்.





















