இலங்கை சுங்கத் திணைக்களத்தில் விசேட மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமை இன்று (01) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, அனைத்து இறக்குமதியாளர்களும் பிரகடனப்படுத்துபவர்களும் தமது சுங்கப் பிரகடனங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்களை செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பத்துடன் (Digital Signature) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய முறையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் சுங்கப் பிரகடனங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையானது, சுங்க விடுவிப்பு செயல்முறையை மிகவும் திறமையாகவும், விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்க வழிவகுக்கும்.
டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை இம்முறைமை அடையாளம் காணும் என்பதால், விடுவிப்பு செயல்முறையின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்க இம்முறைமை பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






