லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வழக்கு விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கமொன்று தொடர்பில் அவரைக் கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த பின்னர் அவர் இன்று (07) பிற்பகல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை முதலீட்டுச் சபையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு கண்காட்சியொன்றில் பங்கேற்று, ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் கண்காட்சி செலவுகளுக்காக 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை பொக்கிஷக விதிமுறைகளுக்கு முரணான வகையில் செலுத்துமாறு முதலீட்டுச் சபையின் தலைவரைத் தூண்டியதன் மூலம் லஞ்சச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ புரிந்துள்ளதாக குற்றம்சாட்டியே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


