இலங்கையில் பல தசாப்தங்களாக மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான பிரதான காரணம் காயங்கள் மற்றும் விபத்துகளுக்கு உள்ளாவதேயாகும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடையின் கீழ் அனைத்து நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இப் புதிய பிரிவு, 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.
நிகழ்வில் மேலும் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க:
“இலங்கையில் பல தசாப்தங்களாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான பிரதான காரணம் காயங்கள் மற்றும் விபத்துகளாகும். மன்னார் புவியியல் ரீதியாக ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதிய என்பதால், மன்னார் மாவட்டத்திற்கு விரைவாக அணுகக்கூடிய இலவச மற்றும் தரமான சுகாதார சேவை மிகவும் முக்கியமானது.
இம்மருத்துவமனைக்கு பயிற்சி வைத்திய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இவ்வருடமே ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு CT ஸ்கேனர் எந்திரம் ஒன்றைக் கொள்முதல் செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இம்மருத்துவமனைக்கு சிறந்த கதிரியக்கவியல் (Radiology) வசதிகள் கிடைக்கும்.
எனது 36 வருட அரச சேவையில், கடமையாற்றும் போது நிதிச் சிக்கல்கள் எதையும் எதிர்கொள்ளாத ஒரே காலப்பகுதி கடந்த வருடமே ஆகும் என்பதைக்கூற வேண்டும். ஜனாபதி அநுர குமார திசாநாயக்க உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தின் நுண்ணறிவுமிக்க பேரியல் பொருளாதார மேலாண்மை காரணமாக, நாட்டின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதி இடைவெளி உருவாக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகை, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பாதுகாப்புப் படைப் பிரதானிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி எஸ். உட்பட அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை பணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்களும் கலந்துகொண்டனர்.





















