அமெரிக்க காங்கிரஸ் ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை நிறைவேற்றியுள்ள போதிலும், அதற்கு எதிராக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்களை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என டிரம்பின் நிர்வாகம் இத்தடைகள் மூலம் அறிவித்துள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் கடுமையான வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள உக்ரைன், அமெரிக்காவின் இத்தடைகள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. இப்புதிய சட்டத்தின் மூலம் டிரம்பிற்கு வரிகளை விதிக்கும் நிருவாக அதிகாரம் நேரடியாகக் கிடைப்பதுடன், இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு எதிராக 100% வரை வரிகளை விதிக்கும் ஆற்றலும் அவருக்குக் கிடைக்கிறது.
இதற்கமைய, 2026 செப்டம்பர் 16-17 இரவு வேளையில் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை நிறைவேற்றியது. ஆகஸ்ட் மாதத்தில் செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபை ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் ‘நிழற்படைப் படகுகளுக்கு’ (shadow fleet) எதிரான பலமான தடைகள் அடங்கிய சட்ட மூலத்தை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் ஜனநாயகக் கட்சி சட்டவாக்கத்தாளர்கள் டொனால்ட் டிரம்பிற்கு வரிகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் தன்னிச்சையான அதிகாரத்தை வழங்க விரும்பாமை காரணமாக, பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பு முடிவு நீண்ட நேரமாக இழுபறியில் இருந்தது. இறுதியில் 159 எதிர்ப்புகளுக்கு மத்தியில் 262 காங்கிரஸ்காரர்களின் ஆதரவுடன் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதுடன், இனி அமெரிக்க ஜனாதிபதி இதில் கையொப்பமிட வேண்டியுள்ளது.
2025 ஜனவரியில் குடியரசுக்கட்சி ஜனாதிபதி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் எடுத்த முதலாவது முக்கிய நடவடிக்கை இதுவாகும். அமெரிக்க காங்கிரஸினால் நிறைவேற்றப்பட்ட இத்தடைகள் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் முக்கியமாக ரஷ்ய எரிசக்தித் துறையைக் இலக்கு வைத்துள்ளன. உக்ரைனுடனான போரையும் பொருட்படுத்தாது தமது சரக்கு போக்குவரத்தைச் முன்னெடுக்கும் ரஷ்ய எண்ணெய் தாங்கிப் படகுகளான புடினின் “பேய் படகுப் படையை” (Ghost Fleet) இத்தடைகள் பிரத்தியேகமாக இலக்கு வைத்துள்ளன.
ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்க இச்சட்டமூலம் முக்கியமாக டொனால்ட் டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்நாடுகளுள் சீனாவும் இந்தியாவும் அடங்குகின்றன. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மேற்கத்தைய நாடுகளின் புறக்கணிப்பு காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி தற்போது சீனா மற்றும் இந்தியா மூலமே நடைபெறுகிறது.
டிரம்பின் இப்புதிய வரி அமைப்புக் கொள்கைக்கு எதிராக மோடி அரசாங்கம் வியாழக்கிழமை காலையில் தனது பதிலை வழங்கியது.
“1.4 பில்லியன் இந்தியர்களின் தேவைகளுக்காக எமது எண்ணெய் மூலங்களை நாம் தொடர்ந்து பெற்றுக்கொள்வோம். அதேபோன்று எமது எரிசக்தி மூலங்களை பன்முகப்படுத்தி, சந்தை மாற்றங்களுக்கும் ஏற்ப எம்மை மாற்றிக்கொள்வோம்.” என இந்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா நாளொன்றிற்கு 2.8 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்ததாக சர்வதேச மூலங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த மாதத்தில் அப்பரிமாணம் 2.1 மில்லியன் பேரல்கள் வரை குறைவடைந்தது. டொனால்ட் டிரம்பின் 18 மாத வணிக அச்சுறுத்தல்களுக்குப் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது மக்களின் முன்னுரிமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரேபியாவை விடவும் வெகுவாக முன்னிலையில் ரஷ்யா இந்தியாவின் முதன்மை எண்ணெய் விநியோகஸ்தராக விளங்குகிறது.
கடந்த மாதங்களில் அமெரிக்காவுடன் இப் பிரச்சினை குறித்து உயர்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக புதுடெல்லி வலியுறுத்தியுள்ளது. இதன்போது இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் வரித் தடைகள் உலகளாவிய எரிசக்தி சந்தையையும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் என இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரஷ்யா இந்தியாவின் மிகமுக்கியமான வியூக மற்றும் இராணுவப் பங்காளியாகத் தொடர்வதால், புடின் ஆட்சியை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த வொஷிங்டன் எடுக்கும் முயற்சிகள் இந்தியாவின் இந்நிலைப்பாட்டினால் சிக்கலுக்குள்ளாகும் எனக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிரான தடைகளைப் புதுப்பிப்பதை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது. இது உக்ரைன் ஜனாதிபதியைக் கோபமடையச் செய்துள்ளதுடன், இவ்வொத்திவைப்பின் பின்னணியில் இராஜதந்திர காரணங்களுக்காக பிரான்ஸ் இருப்பதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தொடர்ந்து நீடிக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளனவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் தீவிர வலதுசாரி கட்சிகள் தலைதூக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தீவிர வலதுசாரி தேசியவாதக் கட்சிகள் முன்னிலையில் இருப்பதுடன், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் உக்ரைனிற்கு ஆதரவளிக்க வேண்டாம் என அவர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், அமெரிக்க காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தடைகள், உக்ரைன் போருக்குத் தீர்வு காண்பதற்காக அமெரிக்கா முன்னெடுக்கும் இராஜதந்திர முயற்சிகளை “சிக்கலானதாகவும்” குழப்பமானதாகவும் மாற்றும் என ரஷ்யா வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.























