தமிழ்… தமிழர்… பிரபாகரன் கடவுள் என்று தொடர்ந்து மேடைகளில் கொந்தளித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தொடர்ந்தும் தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் படத்தை தற்போது நீக்கியுள்ளார்.
மேடை பதாகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள் என்பதால் தான் நீக்கியதாக சீமான் தெரிவித்தார்.
மார்ச் 7ம் திகதி சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் பிரபாகரன் படம் நீக்கப்பட்டிருந்தது.
அதேபோல், நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும் பிரபாகரன் படங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.
அவர் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
என்னுடைய கடவுச்சீட்டு இல்லை, என்னால் எந்த நாட்டிற்கும் போக முடியாது. LTTE-ஐ சீமானை வைத்து தான் மீண்டும் கட்டமைக்கிறார்கள் என புகார் அளித்து என்னை முடித்துவிட்டார்கள்.
பிரபாகரனின் படங்களை யூடியூபில் போட்டால் அது முடக்கப்படுகிறது, வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டால் அந்த பக்கத்தை முடக்குகிறார்கள். இத்தனை நெருக்கடிகளை நான் எதிர்கொண்டு ஓடுகிறேன்.” என்றார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும் சீமானின் இச்செயல் குறித்து கேலிப்பேச்சுக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ”தலைவரிடம் இருந்து இம்முறை தேர்தலுக்கு பணம் வராததால் சீமான் தலைவர் படத்தை நீக்கிவிட்டார்.” போன்ற நையாண்டிப் பதிவுகளும் வெளிவந்தவண்ணம் உள்ளன.










