இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் அவதானம் செலுத்தியுள்ளன.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சருன் சரோஎன்சுவான் (Sarun Charoensuwan) ஆகியோருக்கு இடையில் பாங்கொக்கில் அண்மையில் இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது இரு நாடுகளினதும் சாதாரண கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கான விசா விலக்களிப்பு திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து சிறப்பு அவதானம் செலுத்தப்பட்டதுடன், இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறை, பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிலாளர் இடப்பெயர்வு, கல்வி, கடற்சார் பாதுகாப்பு மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களின் அவதானம் செலுத்தப்பட்டது. இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகள் கிடைக்கும் வகையில் இப் நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பது குறித்து இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
















