‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரானந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவித்தலுக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் அவரிடம் வாக்குமூலங்களைப் பெறவுள்ளதாக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ‘சிரிலிய சவிய’ என்ற பெயரில் பேணப்பட்ட கணக்கில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஷிரானந்தி ராஜபக்ஷ உட்பட மூவரின் கூட்டுப் பங்களிப்புடன் அரச வங்கியொன்றின் சுதுவெல்ல கிளையில் இக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஷிரானந்தி ராஜபக்ஷவின் ‘222222222V’ எனும் தேசிய அடையாள அட்டை இலக்கமே இக்கணக்கிற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இக்கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஷிரானந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










