யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி நேற்று (30) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணம், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
காங்கேசன்துறையில் முதலீட்டு வலயமொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் 351.23 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதலீட்டு வலயத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்புக்குள் தற்போது விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகிறது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் மற்றும் மேஜர் WMKK. வீரக்கோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




