மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், மத்தள மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு சட்டவிரோதமாக விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய தொகுதி ஒன்று விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் உறவினர் ஒருவரால் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் அந்தத் தங்கத் தொகுதி, அப்போது நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவய பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளர் லசந்த ருஹுணகே எழுதிய “ராஜபக்ச நிறுவனம்” என்ற நூலில் இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தக் காலத்தில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றிய ஜகத் விஜேவீரவுக்கு அழுத்தம் கொடுத்து தங்கத் தொகுதி விடுவிக்கப்பட்டதாகவும், 2013 ஜூன் 12ஆம் திகதி மத்தல விமான நிலையத்தை வந்தடைந்த UC827 இலக்க விமானத்தில் குறித்த தங்கத் தொகுதி கொண்டுவரப்பட்டதாகவும் லசந்த ருஹுணகே தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.























